நாடு முழுவதும் லோக்சபா மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டம் அமல்படுத்தப்பட்டால், ஐந்து ஆண்டுத் தேர்தல் சுழற்சியில் தேர்தல் பணியாளர்களின் தேவை சுமார் 26 லட்சம் பேர் அளவுக்கு குறையலாம் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு (EAC) வெளியிட்ட ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

அறிக்கையில், 1951-52, 1957, 1962 மற்றும் 1967 ஆண்டுகளில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டதாகவும், பின்னர் மாநில சட்டசபைகள் அடிக்கடி கலைக்கப்பட்டதால் அந்த நடைமுறை நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த யோசனையை 2018ல் சட்ட ஆணையம் முன்மொழிந்தது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு 2024ல் இதுகுறித்து அறிக்கை அளித்தது. தொடர்ந்து 2024 டிசம்பரில் இதற்கான அரசியல் சாசன திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு, பார்லிமென்ட் கூட்டு குழுவிற்கு அனுப்பப்பட்ட நிலையில் அதன் பிரிவுகள் ஆய்வு செய்யப்படுகின்றன.

EAC கணக்கீட்டின்படி, 2024ல் பதிவு செய்யப்பட்ட 10.51 லட்சம் ஓட்டுச்சாவடிகளை அடிப்படையாகக் கொண்டு (துணை ராணுவம், போலீஸ் போன்ற பாதுகாப்புப் பணியாளர்கள் சேர்க்கப்படாமல்) தனித்தனியாக தேர்தல் நடத்தினால் ஒரு ஓட்டுச்சாவடிக்கு மொத்தம் ஒன்பது பணியாளர்கள் தேவைப்படும்; ஒரே நேரத்தில் நடத்தினால் ஆறு பேர் போதுமானது. இதன் அடிப்படையில் முதற்கட்டமாக சுமார் 33% பணியாளர் குறைப்பு சாத்தியம் என கூறப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் பணிகளில் பெரும்பாலும் மாநில அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும், அதில் பள்ளி ஆசிரியர்களின் பங்கு அதிகமாக இருப்பதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது. ஒரே நேரத் தேர்தல் நடைமுறையால் 26 லட்சம் தேர்தல் பணியாளர்களின் நான்கு வேலை நாட்கள் அளவான 1.04 கோடி வேலை நாட்களை மிச்சப்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.