இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக ஆப்கானிஸ்தான் மண்ணை பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபகாலமாக பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் உறவில் மோதல் அதிகரித்துள்ளது. தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் தஞ்சம் அளிக்கிறது என்பதே பாகிஸ்தானின் குற்றச்சாட்டாக உள்ளது.

ராவல்பிண்டியில் ஷியா முஸ்லிம் மதகுருமார்களை சந்தித்த பின்னர் பேசிய அசிம் முனீர், கடந்த மாதம் “கஜப் லில் ஹக்” என்ற பெயரில் பயங்கரவாதத்திற்கு எதிரான ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டதாக தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளையும் அவர்களின் உட்கட்டமைப்புகளையும் முற்றிலும் ஒழிப்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சவுதி அரேபியா, துருக்கி, கத்தார் ஆகிய நாடுகளின் கோரிக்கையைத் தொடர்ந்து பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் போரை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. சில தினங்களுக்கு முன் காபூலில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 400 பேர் உயிரிழந்ததாக ஆப்கான் அரசு குற்றஞ்சாட்டிய பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.