நாடு முழுவதும் பிரீமியம் ரக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல் லிட்டருக்கு அதிகபட்சமாக ரூ.2.35 வரை விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் ஈரானுக்கு எதிராக மேற்கொண்டு வரும் போர் சூழல் மற்றும் வளைகுடா பகுதிகளை நோக்கிய ஈரானின் நடவடிக்கைகள் காரணமாக கச்சா எண்ணெய் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டு, உலகளாவிய எரிபொருள் சந்தையில் தாக்கம் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹெச்பிசிஎல், பிபிசிஎல், இந்தியன் ஆயில் ஆகிய முன்னணி எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் பிரீமியம் வகை பெட்ரோல்களின் விலையை உயர்த்தியுள்ளன. ஹெச்பிசிஎலின் ‘பவர் பெட்ரோல்’, பிபிசிஎலின் ‘ஸ்பீடு’, இந்தியன் ஆயிலின் ‘எக்ஸ்பி95’ ஆகியவற்றின் விலை லிட்டருக்கு ரூ.2.09 முதல் ரூ.2.35 வரை உயர்ந்துள்ளது. இந்த உயர்வு பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாதாரண பெட்ரோலுக்கு பொருந்தாது.
டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக இணை செயலாளர் சுஜாதா சர்மா, சாதாரண பெட்ரோல் விலையில் எந்த உயர்வும் இல்லை என்றும், பிரீமியம் பெட்ரோல் விற்பனை மொத்த தினசரி விற்பனையில் 2% முதல் 4% மட்டுமே என்றும் கூறினார்.
பிரீமியம் பெட்ரோல் விலை உயர்வைத் தொடர்ந்து, தொழில்துறைக்கு வினியோகிக்கப்படும் பெட்ரோல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.67 இருந்து ரூ.109.59 ஆக உயர்ந்துள்ளது.




