30 உறுப்பினர்களைக் கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 23-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது.

இந்தத் தேர்தலில் திமுகவும் காங்கிரஸும் தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. இதேவேளை, ஆளும் என்ஆர் காங்கிரஸ்-பாஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான இழுபறி நீடித்ததாக தெரிவிக்கப்பட்டது.

பாஜ தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்த நிலையில், முதல்வர் என். ரங்கசாமி அவர்களை சந்திப்பதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதுடன், கூட்டணியில் தொடர்வதை ரங்கசாமி உறுதி செய்துள்ளார்.

இந்தச் சூழலில், சட்டசபை தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடும் வகையில் முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவர் தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் தொகுதிகளில் போட்டியிடுகிறார்.