புதுடில்லி: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக உள்ள வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சரணடைய வேண்டாமென வழங்கப்பட்ட விலக்கை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மேலும் நீட்டித்தது.
இந்த வழக்கில், விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் 2023ஆம் ஆண்டு ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதனைத் தொடர்ந்து தண்டனையை நிறுத்தி வைக்கவும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கவும் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன், உடனடியாக சரணடைய உத்தரவிடப்பட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், முன்னதாக ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இன்றைய விசாரணையில், தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மறு ஆய்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் சரணடைவதில் இருந்து விலக்கு தொடர வேண்டும் என ராஜேஷ் தாஸ் கோரினார். தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு ஏற்கனவே வழங்கப்பட்ட விலக்கை நீட்டித்து, மறு ஆய்வு மனுவை விரைவாக விசாரித்து வழக்கை முடிக்க சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.




