சென்னை: முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு எதிராக நக்சல் ஆதரவு குழுக்கள் தாக்குதல் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் வந்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் அ.தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய இந்த மூவரின் பெண்கள் தொடர்பான கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. பின்னர் அவர்கள் தங்களின் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
உளவுத்துறை மற்றும் கியூ பிரிவு போலீசார் அரசுக்கு அளித்த அறிக்கையில், தேர்தல் பிரசார மேடைகளில் செருப்பு, கற்கள் வீசுதல், பெண்களை முன்னிறுத்தி வாகனங்களை முற்றுகையிடுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் குழப்பம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, அவர்களின் பயண திட்டங்களை முன்கூட்டியே சேகரித்து, சம்பந்தப்பட்ட இடங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். மூவரும் தீவிர கண்காணிப்பிலும் வைக்கப்பட்டுள்ளனர்.




