மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், மட்டால ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு அமெரிக்க போர் விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்க இலங்கை அரசு மறுத்துள்ளது.
இது குறித்து பார்லிமென்டில் பேசிய இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க, புவிசார் அரசியல் அழுத்தங்கள் இருந்தாலும் நாட்டின் நடுநிலை நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றார். மார்ச் 4 மற்றும் மார்ச் 25 ஆகிய தேதிகளில் தரையிறங்க அனுமதி கோரப்பட்டதாகவும், இரு கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மத்திய கிழக்கு போர் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட சவால்களை உருவாக்கியுள்ளதாகவும், அதனை எதிர்கொள்ள இலங்கை க்யூ.ஆர். குறியீடு அடிப்படையிலான தேசிய எரிபொருள் அனுமதி சீட்டு முறையை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தலா எட்டு கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை ஏந்திய இரண்டு போர் விமானங்களை கொண்டு வர அமெரிக்க தரப்பு முயன்றதாகவும், அந்த வேண்டுகோளுக்கு இலங்கை மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறி, நடுநிலையைப் பேண தேவையான அனைத்தையும் செய்வோம் என்றார்.




