புதுடில்லி: அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நீடிக்கும் போர் சூழலில் மத்திய அரசு நிதானமாக மவுனம் காப்பது “பொறுப்பான ராஜதந்திரம்” என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆதரவு தெரிவித்தார்.

இந்தப் போரை சர்வதேச சட்டத்தின் கீழ் நியாயப்படுத்த முடியாது என்றும், இறையாண்மை போன்ற நீண்டகாலக் கொள்கைகளுக்கு முரணானதாகவும் அவர் கூறினார். அதே நேரத்தில், இந்தியாவின் மவுனத்தை போரை ஆதரிப்பதாகப் பொருள் கொள்ளக் கூடாது என்றார்.

ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டபோது மத்திய அரசு உடனடியாக இரங்கல் தெரிவிக்காதது குறித்து பேசும் போது, அதை அவசியம் கண்டிக்கத்தக்கதாகக் கருத வேண்டியதில்லை என தரூர் குறிப்பிட்டார். உலகளாவிய நீதிக்கு குரல் கொடுப்பதோடு, நாட்டின் நலன் மற்றும் இறையாண்மையை பாதுகாப்பதும் முக்கியம் என்றார்.

ஈரானிய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வளைகுடா அரபு நாடுகளிலும் இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார். அந்தப் பிராந்தியத்தின் வழியாக நடைபெறும் பெரும் வர்த்தகம், வளைகுடா எண்ணெய்-எரிவாயுவை சார்ந்த எரிசக்திப் பாதுகாப்பு, மேலும் அங்குள்ள சுமார் 90 லட்சம் இந்திய தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் நலன் ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.

அவசரமாக எடுக்கப்படும் முடிவுகள் கோடிக்கணக்கான மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும், தேச நலனுக்காக மத்திய அரசு நிதானத்தை கடைப்பிடிப்பதே அவசியம் என்றும் தரூர் கூறினார். காங்கிரஸ் தலைமையுடன் கருத்து வேறுபாடுகள் வெளிப்படும் சூழலில் மத்திய அரசை அவர் மீண்டும் பாராட்டியிருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.