வாஷிங்டன்: கத்தாரை மீண்டும் ஈரான் தாக்கினால், ஈரானின் ஒட்டுமொத்த எரிவாயு தளங்களையும் அமெரிக்கா அழிக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். இனி இஸ்ரேல் ஈரானை தாக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளும் மோதல் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் முக்கிய இயற்கை எரிவாயு தளமான ‘சவுத் பார்ஸ்’ மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதற்குப் பதிலடியாக, அண்டை நாடான கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு ஆலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த மோதலில் கத்தார் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், தாக்குதலுக்குப் பிறகு ஈரானிய தூதரக அதிகாரிகள் 24 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என கத்தார் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஐக்கிய அரபு எமிரேட்சின் எரிசக்தி நிலையங்களையும் ஈரான் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு சில எரிசக்தி நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக எமிரேட்ச் அதிகாரிகள் கூறினர்.
இந்த தாக்குதல்களை டிரம்ப் கடுமையாக கண்டித்தார். தனது சமூக வலைதள பதிவில், ‘சவுத் பார்ஸ்’ மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு முன்கூட்டியே தெரியாது என்றும், கத்தார் “அப்பாவி நாடு” என்பதால் அதன் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் கூறி, மீண்டும் தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.




