உத்தர பிரதேசம் ஹபூர் மாவட்டத்தில், ஹிந்து கோவில்கள் மற்றும் முக்கிய இடங்கள் குறித்த தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ. தொடர்புடைய கும்பலுக்கு அனுப்பியதாக கூறி இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பாகிஸ்தான் தொடர்புடைய ஒருவருடன் சந்தேகநபர்கள் தொடர்பில் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். இதன் போது தவுலானா பகுதியில் இருந்து இருவரை பிடித்தனர்.
விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் தவுலானா அருகே பீப்லிஹ்டாவை சேர்ந்த அசீம் ரானா மற்றும் மீரட் மாவட்டம் ஜெய் கிராமத்தை சேர்ந்த ஆசாத் ராஜ்புத் என அடையாளம் காணப்பட்டனர்.
போலீஸ் எஸ்.பி. குன்வார் ஞானஜெய் சிங் கூறுகையில், 2025 டிசம்பர் முதல் ஐ.எஸ்.ஐ. தொடர்புடையதாக கூறப்படும் சாஜாத் பாட்டி என்பவருடன் இருவரும் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பில் இருந்ததாக தெரிவித்தார். மேற்கு டில்லி மெட்ரோ நிலையப் பகுதியை ஒட்டிய கோவில் மற்றும் முக்கிய இடங்களின் புகைப்படங்கள், வீடியோக்கள், அவை அமைந்துள்ள இட விவரங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பியதாகவும், கிரேட்டர் நொய்டா பிஸ்ராக் பகுதியிலுள்ள கோவில் குறித்த தகவல்களையும் பகிர்ந்ததாகவும் போலீசார் குற்றம்சாட்டினர்.
இந்த தகவல்கள் கோவில்களை இலக்காக வைத்து தாக்குதல் திட்டமிட பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடந்து வருவதாகவும், பெரிய பயங்கரவாத தாக்குதலுக்கான தயாரிப்பின் ஒரு பகுதியாக தகவல் வழங்கப்பட்டதா என்பதையும் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.




