வாஷிங்டன் தெரிவித்ததாவது, ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தும் திறன் சமீப வாரங்களில் கணிசமாக குறைந்துள்ளது. இதே நேரத்தில், ஈரான் மீது அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து மேற்கொள்ளும் தாக்குதல் மூன்றாவது வாரமாக தொடர்கிறது.

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத் செய்தியாளர்களிடம், தொடக்கத்துடன் ஒப்பிடும்போது ஈரானின் ஏவுகணை தாக்குதல் வேகம் சுமார் 90% குறைந்துள்ளதாகவும், ட்ரோன் தாக்குதல்கள் சுமார் 95% குறைந்துள்ளதாகவும் கூறினார். மேலும், ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தி மையங்கள் அழிக்கப்பட்டதால் புதிய ஏவுகணைகளை தயாரிக்க முடியாது என்றும், கடற்படை மற்றும் விமானப்படை திறன்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் அமெரிக்காவின் இந்த மதிப்பீட்டுக்கு மாறாக, சில ராணுவ நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஈரான் தனது முழு ஆயுத களஞ்சியத்தையும் இன்னும் பயன்படுத்தவில்லை என சந்தேகம் வெளியிட்டுள்ளனர். நிலத்தடி சுரங்கங்களில் ‘பேரழிவு’ அளவிலான ஆயுதங்களை இறுதி தாக்குதலுக்காக பதுக்கி வைத்திருக்கலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஈரான் எஞ்சியிருக்கும் வலிமையை ஒரே நேரத்தில் திரட்டி தாக்குதல் நடத்தினால், மேற்காசிய நாடுகளின் எரிசக்தி நிலையங்களுக்கு ஆபத்து ஏற்பட்டு, உலக பொருளாதாரத்திலும் பெரிய பாதிப்பு ஏற்படலாம் எனவும் அவர்கள் கூறினர்.

இந்த எச்சரிக்கைகளுக்கு பதிலளித்த ஹெக்செத், எந்த வாய்ப்பையும் அமெரிக்கா நழுவ விடாது என்றும், பதுக்கி வைக்கப்பட்ட ஆயுதங்களை முன்கூட்டியே முறியடிக்க இதுவரை இல்லாத அளவிலான பெரிய தாக்குதல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதன்படி, ஆயுதங்கள் ஏவப்படுவதற்கு முன்பே அவற்றின் ஏவுதளங்களிலேயே அழிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.