வாஷிங்டன்: ஈரானுடனான போரில் அமெரிக்கா 16 ராணுவ விமானங்களை இழந்துள்ளதாகவும், குறைந்தது 13 அமெரிக்கப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

28ம் தேதி தொடங்கிய இந்த மோதல் மூன்றாவது வாரமாக நீடிக்கிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடாவில் அமெரிக்கப் படைத்தளங்கள் உள்ள நாடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் பெரும் இழப்பை சந்தித்ததாக கூறப்பட்டாலும், அமெரிக்காவுக்கும் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் பெரும் சேதமடைந்ததாகவும், அமெரிக்க வான் தடுப்பு அமைப்புகளை ஈரான் உடைத்ததாகவும் கூறப்படுகிறது.

விமான இழப்புகளில், குவைத் படையினரின் தவறுதலான தாக்குதலில் மூன்று எப்-15 போர் விமானங்களும், ஒரு கேசி-135 எரிபொருள் நிரப்பும் விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ப்ளூம்பெர்க் தெரிவித்தது. கேசி-135 விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மொத்தத்தில், குறைந்தது 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அறிக்கை கூறுகிறது. மேலும் 10 அமெரிக்க ட்ரோன்களை ஈரான் சுட்டு வீழ்த்தியதாகவும், அதே நேரத்தில் ஈரான் ஏவுதளங்கள் மற்றும் ட்ரோன்களை அமெரிக்கப் படையினர் தரைமட்டமாக்கியதாக அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.