சென்னை: சினிமா பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டதற்கு எதிராக 230 தமிழ் எழுத்தாளர்கள் இணைந்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது விருதின் மதிப்புக்கும் தமிழ் இலக்கிய மரபுக்கும் அவமதிப்பாகும் என அவர்கள் கூறினர்.
இந்திய இலக்கிய உலகில் மிக உயர்ந்த அங்கீகாரமாகக் கருதப்படும் ஞானபீடம், படைப்பாற்றலுடன் சேர்த்து மானுட அறம், சமூக விழுமியங்கள் ஆகியவற்றையும் பிரதிபலிக்கும் ஆளுமைகளுக்கே வழங்கப்பட வேண்டும் என்றும், அந்த விருதின் தார்மீகப் பொறுப்பை காக்க வேண்டியது அவசியம் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வைரமுத்துவின் எழுத்துகள் பெரும்பாலும் திரைத்துறை சார்ந்த வணிக நோக்கில் அமைந்தவை என்றும், தமிழ்ச் சமூகத்தின் ஆழமான பண்பாட்டு-அற விழுமியங்களை பிரதிபலிப்பதாக இல்லை என்றும் கூறி, அவரது இலக்கியத் தகுதியை அவர்கள் கேள்விக்குள்ளாக்கினர்.
‘மீ டூ’ இயக்கத்தின் வழியாக 17–18 பெண்கள் வைரமுத்து மீது பாலியல் அத்துமீறல் குறித்துப் பகிரங்கமாகப் புகார் தெரிவித்துள்ளதாகவும், இத்தகைய குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள ஒருவருக்கு உயரிய விருதை வழங்குவது பெண்கள் உரிமை மற்றும் சமத்துவம் பேசும் நவீன சமூகத்துக்கு முரணாகும் என்றும் அறிக்கை கூறுகிறது. மேலும், முன்பு ஓஎன்வி இலக்கிய விருது தொடர்பான அறிவிப்பில் எழுந்த எதிர்ப்புகளுக்குப் பிறகு கேரள கலாசார அமைப்பு தனது முடிவைத் திரும்பப் பெற்றதை நினைவூட்டி, அந்த முன்னுதாரணத்தை ஞானபீடக் குழு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.




