டில்லியிலிருந்து கனடாவின் வான்கூவருக்கு சென்ற ஏர் இந்தியா விமானம், கனடாவில் தரையிறங்க தேவையான அனுமதி தொடர்பான நிர்வாகக் குறைபாடு காரணமாக சுமார் எட்டு மணி நேரம் பறந்த பின்னர் மீண்டும் டில்லிக்கே திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஏஐ-185 என்ற இந்த விமானம் மார்ச் 19 காலை 11:34 மணிக்கு டில்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணிகளுடன் புறப்பட்டது. சீன வான்வெளியில் குன்மிங் பகுதி அருகே சென்றபோது, கனடாவில் தரையிறங்குவதற்கான அனுமதி பெறப்படவில்லை என்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
கனடா தரப்பில் ஏர் இந்தியாவின் ‘போயிங் 777-300ER’ வகை விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த சேவை ‘போயிங் 777-200LR’ வகை விமானத்தில் இயக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து விமானம் திரும்பி, மொத்தம் 7 மணி 54 நிமிடங்கள் பறந்த பின்னர் டில்லியில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
இதுகுறித்து ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், நிர்வாக ரீதியிலான சிக்கலே காரணம் என்றும், நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை பின்பற்றவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்த நிறுவனம், பாதிக்கப்பட்ட அனைவரும் மாற்று விமானம் மூலம் பின்னர் வான்கூவருக்கு புறப்பட்டதாக கூறியது.




