ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் மற்றும் உள்துறை அமைச்சர் டோனி பர்க், ரம்ஜான் முடிவை குறிக்கும் ஈத்-அல்-பித்ர் தொழுகைக்காக சிட்னி லக்கம்பா மசூதிக்கு சென்றனர். இது நாட்டின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.
தொழுகை தொடங்கிய சுமார் 15 நிமிடங்களில், அங்கிருந்த சிலர் பிரதமரையும் அவரது அமைச்சரவை சகாக்களையும் நோக்கி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். “வெட்கக்கேடு, வெளியேறு” எனக் கூறி, பிரதமர் ஏன் அங்கு இருக்கிறார் என கேள்வி எழுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்ப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து பிரதமர் அல்பனீஸ் அங்கிருந்து வெளியேறினார். முழக்கமிட்ட நபர்களை போலீசார் அப்புறப்படுத்தியதாக செய்தி தெரிவிக்கிறது.
லக்கம்பா மசூதியை நிர்வகிக்கும் லெபனான் முஸ்லிம் சங்கம், பிரதமரை அழைத்த முடிவை ஆதரித்து விளக்கம் அளித்துள்ளது. முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை நேரடியாக தெரிவிக்கவே அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், உரையாடலை தவிர்ப்பதால் பயன் இல்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
காசா போரில் இஸ்ரேல் அரசுக்கு ஆஸ்திரேலிய அரசு ஆதரவாக செயல்படுகிறது, போரை நிறுத்த அழுத்தம் கொடுக்கவில்லை என முஸ்லிம் சமூகத்தின் ஒரு பகுதி கருதுவதாகவும் செய்தி கூறுகிறது. மேலும், கடந்த டிசம்பரில் போண்டாய் கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து சில முஸ்லிம் அமைப்புகள் தடை செய்யப்பட்டதாகவும், இதனால் ஆஸ்திரேலியாவில் முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது; இதுவே ஒரு பகுதியினரின் கோபத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது.




