செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகளை பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக சித்தரிக்கும் படங்களை உருவாக்கி சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக பீஹாரை சேர்ந்த ஒரு வாலிபரை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் பீஹார் மாநிலம் அர்வால் மாவட்டத்தை சேர்ந்த சித்தநாத் குமார் என போலீசார் தெரிவித்தனர். ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. ஒருவரும், வெளிநாட்டை சேர்ந்த ஒரு பெண் அரசியல் கட்சித் தலைவரும் அவதூறாக சித்தரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த பதிவுகளுக்கு பலர் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, டில்லி மாநகர போலீசின் சிறப்பு பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. சைபர் கிரைம் பிரிவு உதவியுடன் சந்தேகநபரின் இருப்பிடம் கண்டறியப்பட்டது.
தனிப்படை போலீசார் பீஹாருக்கு சென்று சித்தநாத் குமாரை கைது செய்து டில்லிக்கு அழைத்து வந்தனர். டில்லி லோதி காலனியில் உள்ள சிறப்பு பிரிவு அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.




