சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 300க்கும் மேற்பட்ட ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளால் மக்கள் அடிமையாகி, பெரும் தொகைகளை இழப்பதும், அதனுடன் தொடர்புடைய தற்கொலை சம்பவங்கள் அதிகரித்ததும் கவலை அளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த ஆண்டு மத்திய அரசு ‘ஆன்லைன் கேமிங்’ சட்டத்தை அமல்படுத்தியது. பயனர்களிடமிருந்து பணத்தை சுரண்டும் வகையிலான விளையாட்டுகளை இந்த சட்டம் தடை செய்கிறது. சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து சுமார் 4,900 ஆன்லைன் விளையாட்டு தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தொடர்ந்து இத்தகைய தளங்களை கண்காணித்து வருவதாகவும், சட்டவிரோத தளங்கள் கண்டறியப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது. அங்கீகாரம் இல்லாத சூதாட்ட தளங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.