அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். சந்திப்புக்குப் பிறகு அவர் நிருபர்களிடம் பேட்டியளித்தார்.
அமித்ஷாவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை என்றும், திமுகவை வீழ்த்த 234 தொகுதிகளிலும் கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது மற்றும் ஒற்றுமையுடன் தேர்தலை சந்திப்பது குறித்து தான் ஆலோசித்ததாகவும் தினகரன் தெரிவித்தார்.
டில்லி பயணத்தின் போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயலையும் சந்தித்ததாக கூறிய அவர், டில்லிக்கு வந்ததில் தவறு இல்லை என்றும், அமித்ஷா ஒவ்வொரு முறையும் தமிழகத்துக்கு வர முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.
அரசியல் விமர்சனங்களுக்கு பதிலளித்த தினகரன், தமது டில்லி பயணத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் பயத்தால் ‘திமுகவுக்கும் டில்லிக்கும் இடையேயான போட்டி’ என கூறுவதாக விமர்சித்தார். மேலும், தேசிய அளவில் பாஜ தலைமையிலான கூட்டணியில் தமிழகத்தில் அதிமுக தான் தலைமை வகிக்கிறது என்றும் கூறினார்.
மேலும், தான் சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என ஏற்கனவே தெரிவித்ததாகவும், கூட்டணி முழுமையடைந்துவிட்டதாகவும், சசிகலாவை கூட்டணிக்குள் கொண்டுவரும் எண்ணமில்லை என்றும் தினகரன் கூறினார்.




