தமிழகத்தில் திமுக–காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு முடிந்திருந்தாலும், புதுச்சேரியில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை என்று தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னையில் தெரிவித்தார்.

உடன்பாடு தாமதமாக இருப்பதால், இரு கட்சிகளின் வேட்பாளர்களும் தனித்தனியாகவே வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். வேட்பு மனுத் தாக்கலுக்கான கடைசி நாள் மார்ச் 23 என்பதால், இறுதி முடிவு வந்த பின் வாபஸ் பெறலாம் என்ற நம்பிக்கையில் மனுத் தாக்கல் நடைபெறுகிறது.

கூட்டணி பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக நடைபெற்று வருவதாக கூறிய சோடங்கர், தமிழகத்தில் திமுக தலைமையும், புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையும் என்பது வழக்கமாக கடைபிடிக்கப்படும் மரபு என விளக்கினார்.

முந்தைய நடைமுறைகளின்படி புதுச்சேரியில் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும், திமுக 9 தொகுதிகளிலும் போட்டியிடுவது வழக்கம் என்றும், ஆனால் இந்த முறை முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என திமுக அழுத்தம் கொடுக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், இரு தரப்பும் தனித்தனி குழுக்கள் அமைத்து தொடர்ந்து பேசி வருவதாகவும், திமுக தங்களுக்கு 14 தொகுதிகள் வேண்டும்; மீதமுள்ள 3 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கலாம் என முன்மொழிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.