தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் போலி சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு (DVAC) உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு, திருநெல்வேலியில் துணை இயக்குநர் சரவணபாபுவின் அலுவலகத்தில் 2025 நவம்பர் 17 இரவு மர்ம நபர்கள் ரூ.2.5 லட்சம் பணத்தை வைத்ததாக கூறப்படும் சம்பவத்தின் பின்னணியில் வந்துள்ளது. அந்த விவகாரத்தில் சரவணபாபு மற்றும் தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு வீரர் செந்தில்குமார் மீது லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
பின்னர், தீயணைப்பு துறை அதிகாரிகளே திட்டமிட்டு நாடகம் நடத்தி துணை இயக்குநரை சிக்கவைக்க முயன்றிருக்கலாம் என்ற தகவல் வெளிவந்ததாக கூறப்பட்டது. சரவணபாபு அளித்த புகாரின் அடிப்படையில் பெருமாள்புரம் போலீசார் ஐந்து பேரை கைது செய்தனர். தொடர்புடைய திருப்பூர் தீயணைப்பு அதிகாரி வீரராஜ் தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி செந்தில்குமார் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். நீதிபதி புகழேந்தி முன்னிலையில் நடந்த விசாரணையில், சரவணபாபு கன்னியாகுமரியில் பணியாற்றிய காலத்தில் சென்னை ராஜ்பவன் தீயணைப்பு வீரர் சுந்தரராஜன் போலி சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் நடவடிக்கை எடுத்திருந்ததாகவும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை இவ்வழக்கில் சிக்கவைக்க முயன்றிருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டது.
இதன் அடிப்படையில், 2019–2020 காலகட்டத்தில் கன்னியாகுமரியில் வழங்கப்பட்டதாக கூறப்படும் இரண்டு போலி சான்றிதழ்கள் உள்ளிட்ட, மாநிலம் முழுவதும் உயரதிகாரிகள் வழங்கியதாக கூறப்படும் போலி சான்றிதழ்கள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க DVAC-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு மார்ச் 26க்கு ஒத்திவைக்கப்பட்டது.




