ஈரான்–இஸ்ரேல் போர் தொடங்குவதற்குமுன் தங்கம் விலை வேகமாக உயர்ந்து உச்சத்தைத் தொட்டது. போர் தொடங்கியதும் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக தங்கம் விலை தற்போது சரிவுப் போக்கில் காணப்படுகிறது.

இதற்கான காரணங்களை விளக்கி கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர் கூறியதாவது: போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயரும், சமையல் எரிவாயு தட்டுப்பாடு நீடிக்கும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. எண்ணெய் விலை உயர்வால் சரக்கு போக்குவரத்து செலவு கூடும்; இதன் மூலம் பணவீக்கம் அதிகரிக்கும் சூழல் உருவாகும்.

இத்தகைய சூழலில் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்க முன்வர வாய்ப்பு குறைவு என்றும், மாறாக வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு அதிகம் என்றும் அவர் தெரிவித்தார். வட்டி விகிதம் உயர்ந்தால் சந்தையில் பணப்புழக்கம் குறையும்; இது தங்க விலைக்கு அழுத்தமாக அமையும்.

மேலும் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் லாபத்தை எடுத்துக்கொள்ளத் தொடங்கியதால் விலை வேகமாக சரிகிறது என்றும் கூறினார். டாலர் கையிருப்பை அதிகப்படுத்தும் நோக்கில் சில முதலீட்டாளர்கள் தங்கத்தில் இருந்து லாபத்தை எடுத்து டாலரில் முதலீடு செய்வதால் ‘டாலர் இண்டெக்ஸ்’ உயரத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது தங்கம் உச்சத்திலிருந்து சுமார் 1,000 டாலர் வரை சரிந்து, பின்னர் சுமார் 200 டாலர் மீண்டும் உயர்ந்து வர்த்தகமாகிறது என அவர் கூறினார். போர் நீடித்தால் லாப முன்பதிவு தொடர்ந்து விலை மேலும் குறையலாம்; போர் நிறுத்தம் அல்லது அமைதி உடன்படிக்கை ஏற்பட்டால் விலை சரிவு தடைபடும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.