சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்காக பெரிய கூண்டுகளில் வைக்கப்பட்டிருந்த பறவைகள் கூட்டமாக இறந்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை பூங்கா திடீரென மூடப்பட்டது. மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த சம்பவம், நகரில் முன்பே எழுந்த பறவை காய்ச்சல் அச்சத்தின் பின்னணியில் கவனம் பெறுகிறது. அடையாறு பகுதியில் ஜனவரி 5 அன்று காகங்கள் தொடர்ச்சியாக இறந்ததாக கூறப்பட்ட நிலையில், மாதிரிகள் மத்திய பிரதேசம் போபாலில் உள்ள மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு, பரிசோதனையில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், இறந்த காகங்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தவும், பறவைகளை கைகளால் தொட வேண்டாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்கா சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சமீபத்தில் ரூ.20 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட நிலையில், வேடந்தாங்கலில் காணப்படும் வகை பறவைகளை பார்வையாளர்களுக்காக பெரிய கூண்டுகளில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பூங்காவில் கூழைக்கடா, கரண்டிவாயன் உள்ளிட்ட பல வகைகள் சேர்த்து 10 இனங்களில் 200க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன் 10க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்ததாகவும், அடுத்தடுத்த நாட்களில் இறப்பு தொடர்ந்ததால் இதுவரை 50க்கும் மேற்பட்ட பறவைகள் சாவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பறவைகள் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த மேலதிகாரிகள் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பூங்கா நிர்வாகம், பறவை காய்ச்சல் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை பணிகளுக்காகவே பூங்கா மூடப்பட்டதாக தெரிவித்தது.




