புதுடில்லி: கச்சா எண்ணெய் வினியோகத்தில் ஏற்பட்ட தடையால் உருவான உலகளாவிய நெருக்கடியை சமாளிக்க, வீட்டிலிருந்து பணியாற்றுவது உள்ளிட்ட எரிபொருள் சேமிப்பு நடவடிக்கைகளை சர்வதேச எரிசக்தி முகமை (IEA) பரிந்துரைத்துள்ளது.
அவ்வமைப்பின் அறிக்கையில், மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதலின் தாக்கமாக உலகம் முழுவதும் எரிபொருள் வரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக அந்த வழியாக 1.50 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயும், 50 லட்சம் பீப்பாய் அளவிலான பிற பொருட்களும் பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மொத்த எண்ணெய் பயன்பாட்டில் சுமார் 20% இந்த வழித்தடத்துடன் தொடர்புடையதாக IEA கூறுகிறது. தற்போதைய சூழல் சர்வதேச எண்ணெய் சந்தையை வரலாற்றில் இல்லாத அளவுக்கு பாதித்துள்ளதாகவும், கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலரை கடந்துள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதன் காரணமாக டீசல், விமான எரிபொருள், சமையல் எரிவாயு போன்ற சுத்திகரிப்பு பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.
இந்த தாக்கத்தை குறைக்க அரசு, தொழில் நிறுவனங்கள் மற்றும் குடும்பங்கள் எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என IEA அறிவுறுத்தியுள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்வது, நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டும் போது குறைந்தபட்ச வேகத்தை மணிக்கு 10 கி.மீ. குறைப்பது, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது, ஒரே காரில் பலர் பயணம் செய்வது, பெருநகரங்களில் தனியார் போக்குவரத்தை குறைப்பது மற்றும் விமானப் பயணங்களை குறைப்பது போன்றவை பரிந்துரைகளில் இடம்பெற்றுள்ளன.




