இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா கடற்படை தளத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் முயற்சி நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் பயன்படுத்தும் கூட்டு கடற்படை தளமாகும்.

ஈரானிலிருந்து சுமார் 4,000 கிலோமீட்டர் தொலைவில் இந்தத் தளம் அமைந்துள்ளது. சம்பவத்தில் ஒரு ஏவுகணை நடுவழியில் செயலிழந்ததாகவும், மற்றொரு ஏவுகணையை அமெரிக்க படையினர் தடுத்து சுட்டு வீழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவலை அமெரிக்காவின் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் தாக்குதல் முயற்சி எப்போது நடந்தது என்பது குறித்து குறிப்பிட்ட விவரம் வெளியிடப்படவில்லை. இதுவரை ஈரான் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை.

ஈரான்-அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான பகைமை தீவிரமடைந்து வரும் சூழலில் இந்தச் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் கோரம்ஷார்-4 வகையாக இருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் கணித்துள்ளதாகவும், அது கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சி, நீண்ட தூர இலக்குகளை குறிவைக்கும் ஈரானின் திறனை வெளிப்படுத்தும் முதல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வளைகுடா பிராந்தியம், அரபிக் கடல், இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க கப்பல்கள் மற்றும் சில ஐரோப்பிய நகரங்கள் வரை ஈரான் ஏவுகணை தாக்குதல் வளையத்துக்குள் இருக்கலாம் என்ற கவலைகளும் எழுந்துள்ளன.