தமிழகத்தில் கள் இறக்கவும் விற்கவும் அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிய மனுவில், தமிழக அரசு பதில் தாக்கல் செய்ய இறுதி வாய்ப்பு வழங்கி மதுரை கிளை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் தாக்கல் செய்த மனுவில், கள்ளில் போதைக்காக வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதால் தடை விதிக்கப்பட்டதாகவும், அது உடல்நலத்திற்கு கேடு எனவும் அரசு தரப்பில் முன்பு கூறப்பட்டதாக குறிப்பிட்டார்.

மேலும், வெளிநாட்டு மதுபான விற்பனையை அதிகரிப்பதற்காகவே களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு மதுபானங்களை விட களில் போதை குறைவாக இருப்பதாகவும் மனுதாரர் வாதிட்டார். மதுவிலக்கு சட்டத்தில் கள் இறக்கவும் விற்கவும் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட வேண்டும் என்றும், தனிப்பட்ட மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்காக பனை மரங்களில் இருந்து கள் இறக்கவும் விற்கவும் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரினார்.

நீதிபதிகள் என். சதீஷ் குமார், எம். ஜோதிராமன் அமர்வு, 2020ல் வழக்கு தொடரப்பட்டும் இதுவரை அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை எனக் குறிப்பிட்டது. ஏப். 27க்குள் பதில் தாக்கல் செய்யத் தவறினால் அடுத்த விசாரணையில் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து, வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தது.