மார்ச் 21 அன்று தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் அரசியல் மற்றும் பொதுநிகழ்வுகள் கவனம் பெறுகின்றன.
மா.கம்யூ. கட்சி செயற்குழு கூட்டம், மார்ச் 23 அன்று நடைபெற இருந்த நிலையில், சூழ்நிலையின் அவசியம் கருதி இன்று அவசரமாக நடத்தப்பட்டது. திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான நீடிக்கும் இழுபறி குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான 2ம் கட்ட நேர்காணல் நடைபெற்றது. மேலும் 50 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விஜய் இறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், புதுச்சேரி வேட்பாளர் பட்டியலை இன்று அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
டில்லியில், தேஜ கூட்டணியில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார். இதற்காக காலை 11.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்.
இதற்கிடையில், அதிமுக-பாஜ தொகுதி பங்கீடு ஆலோசனைக்காக இன்று தமிழகம் வருவதாக கூறப்பட்ட தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயலின் வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி தொடரும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ரம்ஜான் பண்டிகை தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. காலையிலேயே புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி மகிழ்ந்தனர்.




