சென்னை: அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல்களை முன்னிட்டு, பா.ஜ. வேட்பாளர்களை இறுதி செய்ய டில்லியில் மார்ச் 18 அன்று மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலை தொகுதி வாரியாக மாநிலத் தலைவர்கள் முன்வைத்த நிலையில், மோடி இடையிடையே கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. புதிய வேட்பாளரை முன்வைத்தால், கடந்த முறை வென்றவரை ஏன் நிறுத்தவில்லை, அதிருப்தி உள்ளதா, இந்தத் தேர்வுக்கான காரணம் என்ன என்பதுபோன்ற கேள்விகளை அவர் எழுப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதே நேரத்தில், மேற்காசிய போர் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து அவர் தலைவர்களிடம் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உலகத் தலைவர்களுடன் தொடர்ந்து பேசுவதோடு, சர்வதேச அரசியல் மற்றும் எரிசக்தி நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் பல நாடுகளில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில், மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியாவில் தேவையும் அதிகம் என்பதால் விலை அழுத்தம் உருவாகலாம் என மோடி கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. மக்களுக்கு அதிக பாதிப்பு இல்லாமல் இந்த நெருக்கடியை எதிர்கொள்ள தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.




