ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியானுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடி, பாதுகாப்பான மற்றும் தடையில்லா கடல் போக்குவரத்தையும் மொத்த பாதுகாப்பையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அமெரிக்கா–இஸ்ரேல் தொடர்பான போர் 22வது நாளை எட்டியுள்ள சூழலில், பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய அவசியம் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ரம்ஜான் மற்றும் வசந்த காலத் தொடக்கத்திற்கான வாழ்த்துகளைத் தெரிவித்ததாக மோடி குறிப்பிட்டார். பண்டிகைக் காலம் மேற்காசியப் பிராந்தியத்திற்கு அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பை கொண்டு வர வேண்டும் என்ற நம்பிக்கையையும் இரு தலைவர்களும் தெரிவித்ததாக அவர் கூறினார்.

மேலும், ஈரானின் முக்கியக் கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதாகவும், இத்தகைய தாக்குதல்கள் பிராந்திய நிலைத்தன்மையை குலைப்பதோடு உலகளாவிய விநியோகச் சங்கிலியையும் பாதிக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

போரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய அந்நாட்டு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்ததாகவும் மோடி கூறினார்.