ஜெருசலேம்: அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட வான்வழி நடவடிக்கைகளால் ஈரான் கடுமையாக பலவீனமடைந்துள்ளதாகவும், இதனால் போர் மக்கள் நினைப்பதைவிட விரைவில் முடிவடையக்கூடும் எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
கடந்த மூன்று வாரங்களாக நடந்த தாக்குதல்களால் ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் திறனும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரிக்கும் திறனும் பாதிக்கப்பட்டதாக அவர் கூறினார். மேலும், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் ஆயுத களஞ்சியங்கள் பெரிய அளவில் தாக்கப்பட்டு வருவதாகவும், அணு ஆயுதங்களுக்கு தேவையான பாகங்களை உருவாக்கும் தொழிற்சாலைகளும் குறிவைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
அணுசக்தி அச்சுறுத்தலை காரணமாகக் காட்டி கடந்த 28ம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போரைத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் அதன் அண்டை நாடுகளில் உள்ள எரிவாயு நிலையங்கள், மேலும் மேற்காசியப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாகவும் செய்தி தெரிவிக்கிறது.
ஈரானின் முக்கிய எரிவாயு தளங்கள் மீது கூடுதல் தாக்குதல்களை அமெரிக்க அதிபர் டிரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக நெதன்யாகு கூறினார். அதே நேரத்தில், சவுத் பார்ஸ் எரிவாயு தளத்தின் மீது நடந்த தாக்குதல் இஸ்ரேலின் தனிப்பட்ட முடிவு எனவும், இதுவரை வான்வழி தாக்குதல்கள் மட்டுமே நடந்தாலும் தரைவழி நடவடிக்கைக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படையின் செய்தித் தொடர்பாளர் ஜெனரல் அலி முகமது நைனி, ஈரானின் திறன் குறையவில்லை என்றும் எதிரிகள் சோர்வடையும் வரை போர் தொடரும் என்றும் கூறியிருந்தார். அந்த அறிவிப்புக்குப் பிறகு சில மணி நேரங்களிலேயே அவர் இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் உயிரிழந்ததாகவும் செய்தி தெரிவித்தது.




