திருவனந்தபுரம்: காங்கிரசும் ராகுல் காந்தியும் பாஜவின் ‘பி டீம்’ ஆக செயல்படுகின்றனர் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக குற்றம்சாட்டினார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
சபரிமலை தங்க கவசம் தொடர்பான விவகாரத்தில் விசாரணையை கேரள உயர் நீதிமன்றம் கண்காணித்து வருவதாகவும், இதுவரை எந்த குறையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டவில்லை என்றும் அவர் கூறினார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய எவரையும் அரசு விட்டு விடாது என்றும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கத்துடன் இருப்பதாக கூறிய அவர், அவை ஏப்.9-ம் தேதி நடைபெறும் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றார். மேலும், கேரள கல்வித்துறையில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன; கல்வி நிறுவனங்களின் தரம் சர்வதேச அளவை எட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
காங்கிரஸ் “சமரச அரசியல்” செய்து வருவதாகவும், வகுப்புவாதத்தில் ஈடுபடும் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை குழுக்களிடமும் ஆதரவை தேடுவதாகவும் விஜயன் விமர்சித்தார். ஆனால் இடது ஜனநாயக முன்னணி எந்த வகுப்புவாதமாக இருந்தாலும் அதை எதிர்க்கும்; அத்தகைய குழுக்களிடம் ஆதரவு கேட்காது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், வயநாடு மறுவாழ்வு நிதியளிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகளில் மத்திய அரசு கேரளாவுக்கு எதிராக விரோத போக்குடன் நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மாநிலத்திற்கு மத்திய அரசு பெரிதும் உதவியதாக பாஜ மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கூறியது “முட்டாள்தனம்” என்றும் அவர் தெரிவித்தார். இதற்கு முன், கேரள முதல்வரை தவிர மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களை மத்திய புலனாய்வு அமைப்புகள் கைது செய்துள்ளன அல்லது விசாரணைக்கு அழைத்துள்ளன என்று ராகுல் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.




