உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் கருவறையில், 150 கிலோ எடையுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட சிறப்பு ‘ஸ்ரீ ராம யந்திரம்’ தகட்டை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிரதிஷ்டை செய்தார். அந்த யந்திரத்தில் வேத மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ர அறக்கட்டளை சார்பில் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. வேத கணிதத்தின் அடிப்படையில், பகவான் ராமரின் இருப்பை உணர்த்தும் வகையில் கோவிலின் இரண்டாம் தளத்தில் யந்திர தகடு அமைக்கப்பட்டுள்ளதாக செய்தி கூறுகிறது.
பிரதிஷ்டை நிகழ்வுக்குப் பிறகு, தரைத் தளத்தில் உள்ள பால ராமருக்கு தீபாராதனை காட்டி ஜனாதிபதி வழிபட்டார். பின்னர் அவர் உரையாற்றும்போது, பகவான் ராமருக்கான பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது இந்திய வரலாற்றில் “பொற்கால நிகழ்வு” என குறிப்பிட்டார்.
மேலும், துளசிதாசரின் ராம் சரித் மானஸ் நூலை மேற்கோள் காட்டி, ராமருக்கு சொர்க்கத்தைவிட அயோத்தி நகரமே மிகவும் பிடித்தமானது என தெரிவித்தார். தற்போது பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ ராம யந்திரம், காஞ்சி காமகோடி ஜகத்குரு சங்கராச்சாரிய சுவாமிகளால் அயோத்தி ராமர் கோவிலுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறினார்.
சங்கரருக்கும் ஸ்ரீ ராமருக்கும் இடையிலான தொடர்பு மரபுகளின் வழியாக இன்றும் பேணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். ராமரின் அருளால் 2047-க்குள் அல்லது அதற்கு முன்னரே இந்தியா அனைவரையும் உள்ளடக்கிய சமூகமாகவும் வளர்ந்த நாடாகவும் மாறும் எனவும் அவர் தெரிவித்தார்.




