தென் கொரியாவின் டேஜியோன் நகரில் உள்ள கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், 59 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ ஏற்பட்ட நேரத்தில் தொழிற்சாலையில் 170 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாயமானதாக கூறப்படும் 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 25 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது; இதனால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது.
தீ விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. மேலும் கட்டடம் இடிந்து விழும் அபாயம் இருந்ததால் உடனடியாக உள்ளே நுழைய முடியாத நிலை ஏற்பட்டதாகவும், இதுவே பாதிப்பு அதிகரிக்க காரணமாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்பு பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.




