சென்னை: தமிழகத்தின் வளர்ச்சி முழுமையடைய அடுத்த 5 ஆண்டுகளும் “திராவிட மாடல்” தொடர வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தாம் நிர்ணயித்த இலக்குகளை அடைய திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான துறைவாரி வளர்ச்சி இலக்குகளை “ஸ்டாலின் ஸ்டேட்மென்ட்” என்ற பெயரில் வெளியிட்டதாக அவர் கூறினார். இந்த இலக்குகள் பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டவை எனவும் தெரிவித்தார்.
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் “உத்தமர் காந்தி மாதிரி கிராமங்கள்” திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், தொழில்துறை சார்பில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை சார்பில் 5 சிறப்புத் தொழில் குழுமங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைகள் மூலம் பால் உற்பத்தி உயர்த்தவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றார். நகராட்சி நிர்வாகத் துறை மூலம் நகர உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்றும், நெடுஞ்சாலைத் துறை சார்பில் பாதுகாப்பான நவீன சாலை தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார். கைத்தறி மற்றும் ஜவுளித்துறை மூலம் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களும் இடம்பெறும் என்றார்.
மேலும், வீட்டு வசதித் துறை சார்பில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் மொத்தம் 7 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் தேவைப்படும் அனைவருக்கும் போதுமான மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். வேளாண்மைத் துறை மூலம் சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும்; பள்ளிக்கல்வித் துறையில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம், லைப்ரரி 5.0, “வெற்றிப்பள்ளிகள்” திட்டங்கள் செயல்படுத்தப்படும்; உயர்கல்வித் துறையில் “நான் முதல்வன் 2.0” உள்ளிட்ட திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் பொருளாதார முன்னேற்றத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தகுதியுள்ள அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.




