புதுடில்லி: மேற்கு ஆசியா உள்ளிட்ட எந்த மோதலாக இருந்தாலும், அமைதியை விரும்புவோருக்கே தான் எப்போதும் ஆதரவளித்து வந்ததாக காங்கிரஸ் எம்பி சசி தரூர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ஈரான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடத்தி வரும் போர் விவகாரத்தில் மத்திய அரசு மவுனமாக இருப்பது கோழைத்தனம் அல்ல; அது “சிறந்த ராஜதந்திரம்” என தரூர் முன்பு கூறியிருந்தார். இந்த கருத்து விமர்சனத்தை கிளப்பியதுடன், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக அவர் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதற்கு பதிலளித்த தரூர், போர் தேவையற்ற ஒன்று என கூறி, ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தையும் நினைவூட்டினார். போரின் பேரழிவும் உண்மையான இழப்புகளும் தெரிந்திருப்பதால், வீரர்கள் போரை விரும்புவது மிகக் குறைவாகவே இருக்கும் என்றும் அவர் கூறினார்.
ஒரு குடிமகனாக நாட்டைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஒரு பக்கம் இருக்கலாம்; ஆனால் தினமும் மக்கள் உயிரிழக்கும் வகையிலும், பள்ளிக்குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவிகள் எந்த நோக்கமுமின்றி உயிரிழக்கும் வகையிலும் போரைத் தொடர்ந்து நடத்துவது முற்றிலும் வேறு விஷயம் என அவர் தெரிவித்தார். தற்போதைய நிலையில் மோதலில் ஈடுபடுவோர், அண்டை நாடுகள் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்பட்ட சேதம் ஏற்றுக்கொள்ளக்கூடிய எல்லைகளை கடந்துவிட்டதாக கூறிய தரூர், இந்தப் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.




