சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) கூடுதல் தொகுதிகளைப் பெறுவதற்காக தீவிரமாக முயற்சிக்க வேண்டும் என்று கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

வீடியோ கான்பரன்சிங் மூலம் தொண்டர்களிடம் பேசிய அவர், குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிட வேண்டிய சூழல் இருந்தாலும் நம்பிக்கையுடன் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்றார். தொகுதிகளைப் பெறுவதும், நிதி திரட்டுவதும் போராட்டத்தின் மூலம் தான் சாத்தியம் என்றும், நெருக்கடிகளுக்கிடையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டிய பணிச்சுமை இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

25 ஆண்டுகளாக தேர்தல் அரசியலில் தாக்குப்பிடித்தாலும் இந்த களம் இன்னும் நமக்கு புதிதாகவே உள்ளது; அதற்கு முழுமையாக தங்களைத் தகவமைத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார். சமூகச் சூழலும் சாதகமாக இல்லை; விசிக வலிமை பெறக் கூடாது, அரசியல் சக்தியாக வளரக் கூடாது என்று நினைப்பவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர் என்றார்.

அதே நேரத்தில், நாகரிகமான அரசியல் மரபை கட்சி கடைப்பிடிக்கிறது என்றும், தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்களில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறோம் என்றும் தெரிவித்தார். மக்கள் மத்தியில் உள்ள நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதே உண்மையான வெற்றி எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், தமிழகம் முழுவதும் விருப்பமனு பெறுவது ஜனநாயகக் கடமை என்றும், எந்தெந்த தொகுதிகளில் யார் போட்டியிட விரும்புகிறார்கள் என்பதை அறிய இது உதவும் என்றும் கூறினார். கட்சியின் அரசியலைப் பாதுகாப்பதும், விசிக வலிமையைத் தக்கவைத்துக் கொள்வதும் முதன்மை என்றார்.