சென்னை: ஒருவரின் அனுமதியின்றி அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரித்து வாக்காளர்களைத் திசைதிருப்பக்கூடிய சமூக வலைதள பதிவுகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.

மின்னணு மற்றும் சமூக ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களை வெளியிட அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மாநில/மாவட்ட அளவிலான ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் முன் அனுமதி சான்றிதழ் பெற வேண்டும் என்றும், இதற்கான விண்ணப்பம் குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்பே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட அல்லது டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்ட அனைத்து வீடியோக்களிலும் “ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டது”, “டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்டது”, “செயற்கை உள்ளடக்கம்” போன்ற தெளிவான லேபிள்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் சமூக வலைதளப் பக்கங்களில் இத்தகைய தவறான அல்லது சட்டவிரோத வீடியோக்கள் கண்டறியப்பட்டால், மூன்று மணி நேரத்திற்குள் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தேர்தல் கமிஷன் வெளியிட்ட தகவலில், தமிழகத்தில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான ஆண்டு ஊதியம் ரூ.6,000-இல் இருந்து ரூ.12,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், எஸ்.ஐ.ஆர். பணிக்காக ரூ.2,000 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீட்டுவசதி சங்க வளாகங்களில் 14 இடங்களில் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன; இதில் சென்னையில் 5 இடங்கள் இடம்பெறுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.