தோல் தொழில்துறையுடன் தொடர்புடைய பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (CETP) தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் சிறப்பாக செயல்படுகின்றன என்று வர்த்தகத்திற்கான பார்லிமென்ட் நிலைக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது.
திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. டோலா சென் தலைமையிலான குழு, சமீபத்தில் பார்லிமென்டில் மூன்று அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கைகளில், தோல் துறையிலும் சுத்திகரிப்பு நிலையங்களை பராமரிக்கும் முறையிலும் இந்த இரண்டு மாநிலங்களும் முன்மாதிரியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திருச்சி மற்றும் பெருந்துறையில் உள்ள நிலையங்களைத் தவிர, மீதமுள்ள 13 பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் திறம்பட இயங்குகின்றன என குழு தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் செயல்படும் ஒரே சுத்திகரிப்பு நிலையமும் நல்ல முறையில் இயங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் நடைமுறையில் உள்ள ‘தேசிய ஒற்றைச் சாளர முறை’ தோல் துறையில் தொழில் செய்வதை எளிதாக்கி, தேவையான ஒப்புதல்களை சரியான நேரத்தில் பெற உதவுகிறது என அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதன் மூலம் துறை வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், ஏற்றுமதி ஆகியவற்றுக்கு ஆதரவு கிடைப்பதுடன், தொழிற்சாலை கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் உறுதி ஆகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து மாநிலங்களிலும் திறமையான ஒற்றைச் சாளர முறையை நடைமுறைப்படுத்த ஊக்குவிக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு குழு பரிந்துரைத்துள்ளது. பிற மாநிலங்கள் தமிழகமும் மேற்கு வங்கமும் பின்பற்ற வேண்டும்; இது தொழில்துறை வளர்ச்சியையும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையையும் சமநிலைப்படுத்த உதவும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




