உலக சந்தையில் ஈரானின் கச்சா எண்ணெயை விற்பனை செய்ய 30 நாட்களுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் போர் காரணமாக உயர்ந்துள்ள எண்ணெய் விலைகளை குறைக்கும் முயற்சியாக, அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கடல் வழியாக ஈரான் கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்வதற்கான தடைகளை குறுகிய காலத்திற்கு தளர்த்தியதாக கூறப்படுகிறது. இதனால் கப்பல்களில் தேங்கியுள்ள சுமார் 14 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக அமெரிக்க கருவூலச் செயலாளர் பெசென்ட் வெளியிட்ட பதிவில், ஈரான் உலகளாவிய பயங்கரவாதத்தின் தலையாக இருப்பதாகவும், டிரம்பின் “ஆபரேஷன் எபிக் பியூரி” நடவடிக்கை எதிர்பார்த்ததை விட வேகமாக முன்னேறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிரான ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில், உலகிற்கான எரிசக்தி விநியோகத்தை அதிகரிக்கவும், விநியோகத்தை வலுப்படுத்தவும், சந்தை நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் ராணுவ வலிமையை தொடர்ந்து பயன்படுத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், உலக சந்தைகளுக்கு கூடுதல் 440 மில்லியன் பீப்பாய் எண்ணெயை கொண்டு வர டிரம்ப் நிர்வாகம் பணியாற்றி வருவதாகவும், அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி உயர்ந்ததால் எரிசக்தி பாதுகாப்பு வலுப்பட்டு எரிபொருள் செலவுகள் குறைந்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.




