வாஷிங்டன்: மேற்காசியாவில் நீடிக்கும் போர் காரணமாக பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானிடம் உள்ள அணு தொடர்பான பொருட்களை கைப்பற்றுவது குறித்து அமெரிக்கா பல்வேறு வழிகளை ஆலோசித்து வருவதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

22வது நாளாக நீடிக்கும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், உலகளவில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் போர் எப்போது முடிவடையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அமெரிக்கா தனது இலக்குகளை அடைய நெருங்கிவிட்டதாகவும், தற்போது போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிபிஎஸ் நியூஸ் வெளியிட்ட செய்தியின்படி, ஈரானின் அணுப் பொருட்களை மீட்பதற்காக அமெரிக்காவின் ஜாயிண்ட் ஸ்பெஷல் ஆபரேஷன்ஸ் கமாண்ட் (JSOC) படைப்பிரிவை பயன்படுத்துவது உள்ளிட்ட விருப்பங்களும் விவாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுகுறித்து டிரம்ப் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என அந்த அறிக்கை கூறுகிறது.

சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தகவலின்படி, ஈரானிடம் 6% செறிவூட்டப்பட்ட சுமார் 972 பவுண்டு யுரேனியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதி கடந்த ஆண்டு அமெரிக்கா நடத்திய தாக்குதலில் சேதமடைந்த அணு மையங்களின் கீழ் புதைந்திருக்கலாம் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.