த.வெ.க. வட்டாரங்கள் கூறுவதாக வெளியான தகவலின்படி, கட்சித் தலைவர் விஜய் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. எந்த அணியுடனும் சேராமல், வரும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலை தனித்தே எதிர்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின்படி, அதிகாரம், பணபலன் மற்றும் வலுவான கூட்டணி ஆகிய ஆதரவுகளுடன் தி.மு.க. தேர்தலை சந்திக்கும் நிலையில், இருமுனை போட்டி உருவானால் தி.மு.க.-வை எதிர்க்க எளிதாகும் என்ற கணக்கில், தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க.-வை இணைக்க பா.ஜ. தரப்பு முயன்றதாக கூறப்படுகிறது.
மேலும், ஆரம்பத்தில் தெளிவான சம்மதம் அளிக்காமல் இருந்த விஜய், கரூர் உயிரிழப்பு சம்பவம் மற்றும் மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து விவகாரம் ஆகியவற்றுக்குப் பிறகு பா.ஜ. கூட்டணியில் இணைய முடிவு செய்ததாகவும், ஆனால் அது கட்சியின் எதிர்கால அரசியலுக்கு பாதிப்பாகும் என்று த.வெ.க. நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததால், தே.ஜ. கூட்டணியில் அவர் சேரவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த சனிக்கிழமை இரவு சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக டில்லி சென்ற விஜய், ஜெய் ஷாவுக்கு நெருக்கமானவர்களை சந்தித்து கூட்டணி குறித்து தன் முடிவை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதில், தி.மு.க., அ.தி.மு.க. இரண்டையும் விரும்பவில்லை; இரு கட்சிகளும் ஊழல் கட்சிகள் எனக் கருதி மாற்று நல்லாட்சிக்காகவே அரசியலுக்கு வந்தேன் என்றும், அ.தி.மு.க. உள்ள எந்த கூட்டணியிலும் சேர விருப்பமில்லை; இப்போதைக்கு தனித்தே போட்டியிடுவேன்; தேர்தலுக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றும் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவல் அமித் ஷாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், விஜய் விருப்பப்படி இப்போது செயல்படச் சொல்லலாம் என அவர் கூறியதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் பின்னணியில், கடந்த புதனன்று நடந்த ‘இப்தார்’ நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், தனித்து போட்டியிடும் முடிவை திட்டவட்டமாக அறிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




