ஜம்மு பல்கலையில் முதுகலை அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் முகமது அலி ஜின்னா குறித்த குறிப்புகள் இடம்பெற்றதை எதிர்த்து அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது.
தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் பாடத்திட்டத்தில் புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. “தேசமும் சிறுபான்மையினத்தவரும்” என்ற பாடத்தில், “நவீன இந்திய அரசியல் சிந்தனைகள்” என்ற பகுதியின் கீழ் இந்த உள்ளடக்கம் இடம்பெற்றுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் அமைப்பாக குறிப்பிடப்படும் ஏபிவிபி நிர்வாகிகள் பல்கலை வளாகத்தில் போராட்டம் நடத்தி, ஜின்னா தொடர்பான பகுதியை உடனடியாக நீக்க வேண்டும் என முழக்கமிட்டனர்.
இதுகுறித்து பல்கலை நிர்வாகம், பல்கலை மானியக் குழு (யுஜிசி) விதிகளுக்கு இணங்கவே பாடம் சேர்க்கப்பட்டதாக தெரிவித்தது. மேலும் ஜின்னா மட்டுமின்றி சாவர்க்கர், கோல்வால்கர், மகாத்மா காந்தி, அம்பேத்கர், நேரு, வல்லபபாய் படேல் உள்ளிட்ட பலரையும் பற்றிய உள்ளடக்கம் பாடத்தில் இருப்பதாகவும், ஜின்னா பகுதியை நீக்கினால் தேசிய தகுதி தேர்வு (நெட்) எழுதும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் கூறியது.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நடைபெறும் நிலையில் இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது.




