புதுடில்லி: பயணியர் வசதி மற்றும் சேவை ஒழுங்குமுறைகளை மேம்படுத்தும் நோக்கில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்களுக்கு, ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தற்போது டிக்கெட் முன்பதிவின்போது ஜன்னலோரம் போன்ற விருப்ப இருக்கைகளைத் தேர்வு செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதல் கட்டணமின்றி கிடைக்கும் இருக்கைகள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன.
இந்த நிலையில், புதிய வழிகாட்டுதலில் 60% வரை இருக்கைகளை பயணியருக்கு கூடுதல் கட்டணமின்றி வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அமல்படுத்தினால் நிறுவனங்களுக்கு பெரிய நிதிச்சுமை ஏற்படும்; இழப்பை ஈடு செய்ய விமான கட்டணங்கள் உயர்த்தப்படலாம் என இந்திய விமான நிறுவனங்கள் கூட்டமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் கட்டண நிர்ணயம், இருக்கை ஒதுக்கீடு ஆகியவை நிறுவனங்களின் அடிப்படை வணிக முடிவுகள் என்றும், முன் ஆலோசனை இன்றி உத்தரவு வெளியிடப்பட்டதாகவும், இத்தகைய சேவைகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க அமைச்சகத்துக்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்வியையும் அது எழுப்பியுள்ளது.




