புதுடில்லி: உள்நாட்டில் சமையல் எரிவாயு உற்பத்தி அதிகரித்ததைத் தொடர்ந்து, மாநிலங்களுக்கு வழங்கப்படும் வணிக பயன்பாட்டு சமையல் காஸ் சிலிண்டர் ஒதுக்கீட்டை 20 சதவீதம் வரை உயர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த முடிவால் ஹோட்டல்கள், உணவகங்கள், பொது மற்றும் தொழிற்துறை கேன்டீன்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் உள்ளிட்டவை நன்மை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்காசியப் பகுதியில் இஸ்ரேல்–ஈரான் போர் நீடிப்பதால் ஏற்பட்ட விநியோக பாதிப்பைத் தொடர்ந்து, வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வணிக சிலிண்டர் விநியோகம் முன்பு 30% ஆக குறைக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் தற்போது உள்நாட்டில் உற்பத்தி மேம்பட்டு, தட்டுப்பாடு குறைந்து மெல்ல இயல்புநிலை திரும்பி வருவதாக அதிகாரிகள் கூறினர். இதன் தொடர்ச்சியாக, வணிக பயன்பாட்டு விநியோகம் 50% ஆக உயர்ந்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தடையின்றி சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் ஒதுக்கீடு வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களில் முறையாக பதிவு செய்திருக்க வேண்டும்; மேலும் குழாய் மூலம் எரிவாயு இணைப்புக்காக விண்ணப்பித்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக சமையல் காஸ் விநியோகத்தில் எந்த தட்டுப்பாடும் இல்லை என்றும், பீதியில் முன்பதிவு செய்வது குறைந்துள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. பெட்ரோல் பங்க்களில் எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என்பதால் முன்கூட்டியே வாங்கி சேமிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டது; கள்ளச்சந்தை பதுக்கலைத் தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 3,500 இடங்களில் நடந்த சோதனையில் 1,400 சமையல் காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தது.




