சென்னை: தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தேமுதிக-க்கு சட்டசபை தொகுதிகள் ஒதுக்கீடு 10-க்கு குறைவாக இருந்தால், தாங்கள் கட்சி பதவிகளில் இருந்து விலகுவோம் என சில மாவட்டச் செயலர்கள் கட்சிக்குள் கடும் நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
தேமுதிக சமீபத்தில் தி.மு.க. கூட்டணியில் இணைந்த நிலையில், ராஜ்யசபா எம்.பி. இடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சட்டசபை தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு எத்தனை என்பது குறித்து தி.மு.க. இன்னும் உறுதி செய்யவில்லை.
இந்த சூழலில், தேமுதிக-க்கு ஒற்றை இலக்கத்தில் தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்றும், குறிப்பாக எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவுகின்றன. இதைத் தொடர்ந்து, 10-க்கு குறைவாக ஏற்கக் கூடாது என சில மாவட்டச் செயலர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
இந்த எதிர்ப்பை சமாளிக்கும் வகையில் மாவட்டச் செயலர்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய அரசியல் சூழலை விளக்கி, நிர்வாகிகளை சமாதானப்படுத்த தேமுதிக தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.




