திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி (CPI(M)) இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இன்னும் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடிக்கிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ. சண்முகம் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர், 2021 தேர்தலில் போட்டியிட்ட 6 தொகுதிகள் என்ற எண்ணிக்கையைப் பெற வேண்டும் என்பதே மாநில குழுவின் முடிவு என்றும், அதற்கு குறைவாக ஏற்குமாறு வற்புறுத்தக் கூடாது என்றும் தெரிவித்தார்.

கூட்டணியில் கட்சிகள் அதிகமாக இருப்பதால் தொகுதி ஒதுக்கீட்டில் சிரமங்கள் இருப்பதாக முதல்வர் கூறியதாகவும், 5 தொகுதிகளை ஏற்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் சண்முகம் கூறினார். 5 தொகுதிகளை உடனடியாக ஏற்றுக்கொள்வது குறித்து முடிவெடுப்பது சிரமம் என தாம் தெரிவித்ததாகவும் அவர் சொன்னார்.

முதல்வரின் கோரிக்கையை மாநில குழுவில் விவாதித்து உரிய முடிவை எடுத்து பதில் அனுப்புவதாக கூறியுள்ளோம் என்றும், மாலையோ அல்லது நாளையோ கூட்டம் நடத்தி முதலில் எண்ணிக்கையை முடிவு செய்து பின்னர் தொகுதி பட்டியலை வழங்குவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், எத்தனை தொகுதிகள் வழங்கப்படுகின்றன என்பதையே அடிப்படையாக வைத்து கூட்டணியில் இருப்பதா இல்லையா என்பதை மார்க்சிஸ்ட் கட்சி தீர்மானிப்பதில்லை; கொள்கை அடிப்படையிலான தீர்மானங்களின் பேரிலேயே திமுக அணியில் தொடர்கிறோம் என்றும் சண்முகம் கூறினார்.