தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், அப்பகுதி தோட்டக்காரர் ஒருவர் அளித்த தகவல் விசாரணைக்கு முக்கிய திருப்பமாக அமைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்மமுனீஸ்வரன் (39) கைது செய்யப்பட்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் நெல்லை சிறையிலிருந்து மதுரை சிறைக்கு நேற்று முன்தினம் இரவு மாற்றப்பட்டதாக கூறப்பட்டது.
நெல்லை டி.ஐ.ஜி. சரவணன் கூறுகையில், தொடக்கத்தில் சிசிடிவி ஆதாரங்கள் கிடைக்காததால் வீடு வீடாக விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்தார். குற்றவாளி மார்ச் 7, 8, 9, 10 ஆகிய நாட்களில் வேடநத்தம் பகுதியில் சுற்றித் திரிந்தது கண்டறியப்பட்டது.
பார்த்திபனூரில் டிசம்பர் மாதமே திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி வந்த அவர், வேடநத்தம் பகுதியில் தங்கியிருந்ததாக போலீசார் கூறினர். மேலும் ஊரின் ஒதுக்குப்புற காட்டுப்பகுதியில் உள்ள பொது கழிப்பிடங்களை பயன்படுத்தும் பெண்களை கண்காணித்ததாகவும் தெரிவித்தனர்.
மார்ச் 7, 8, 9 ஆகிய நாட்களில் அந்த இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததை சந்தேகத்தில் தோட்டக்காரர் தனது மொபைல் போனில் படம் எடுத்துள்ளார். கொலை நடந்த பின் அவர் போலீசாரிடம் தகவல் அளித்தார். விசாரணையில் பதிவு எண்ணில் உள்ள 3, 6 ஆகிய எண்களை 8, 9 என பெயின்டில் மாற்றியிருந்ததும், காற்றாலை பகுதி சிசிடிவி காட்சிகள் இதை உறுதிப்படுத்தியதும் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் கைது நடந்ததாக டி.ஐ.ஜி. தெரிவித்ததுடன், தகவல் வழங்கிய தோட்டக்காரரை பாராட்டினார்.




