ஹார்முஸ் தீவு அருகே ‘எதிரி’ நாட்டைச் சேர்ந்த எப்-15 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இடையிலான மோதல் 23வது நாளாக நீடிக்கும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கடல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே சூழலில், ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 48 மணி நேர கெடு விதித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள ஹார்முஸ் தீவு அருகே வான் பாதுகாப்பு அமைப்புகள் விமானத்தை இடைமறித்து தாக்கி அழித்ததாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்தன. ‘டெஹ்ரான் டைம்ஸ்’ எக்ஸ் தளத்தில் 29 விநாடி வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் விமானம் கண்டறியப்பட்டு சுட்டு வீழ்த்தப்படும் காட்சிகள் இருப்பதாக கூறியுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட எப்-15 விமானம் அமெரிக்க ராணுவத்துக்கா அல்லது இஸ்ரேல் பாதுகாப்புப் படைக்கா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் வெளியாகவில்லை. இதற்கிடையில், ஈரான் 400 ஏவுகணைகளை வீசியதாகவும், அதில் 92% ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.




