டிரம்ப் அறிவித்த 48 மணி நேரக் கெடு முடிவதற்கு முன்பே, “எதிரிகள்” தொடர்புடைய கப்பல்களைத் தவிர மற்ற அனைத்து கப்பல்களுக்கும் ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருக்கும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% பங்கு வகிக்கும் முக்கிய நீர்வழிப்பாதை ஹார்முஸ் ஜலசந்தி. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்பான போர்நிலையைத் தொடர்ந்து இந்த ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதாகவும், அமெரிக்கா–இஸ்ரேல் கப்பல்கள் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளின் கப்பல்களை அனுமதிக்க முடியாது எனவும் முன்பே ஈரான் கடுமையாக அறிவித்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், 48 மணி நேரத்திற்குள் ஜலசந்தியை திறக்க வேண்டும்; இல்லையெனில் ஈரானின் மின் உற்பத்தி கட்டமைப்புகளை தாக்குவோம் என்று எச்சரித்தார்.
இந்நிலையில், ஐநா கடல்சார் முகமைக்கான ஈரானின் பிரதிநிதி அலி மூசாவி, வளைகுடாவில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்த சர்வதேச கடல்சார் அமைப்புடன் (IMO) ஒத்துழைக்க டெஹ்ரான் தயாராக இருப்பதாக கூறினார். ஈரானின் எதிரிகளுடன் தொடர்பில்லாத கப்பல்கள், டெஹ்ரானுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தால் அந்த நீர்வழியை கடந்து செல்லலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், ராஜதந்திரமே ஈரானின் முன்னுரிமை என்றாலும் பரஸ்பர நம்பிக்கை முக்கியம் என வலியுறுத்திய மூசாவி, ஹார்முஸ் ஜலசந்தியில் உருவான தற்போதைய சூழலுக்கு ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களே காரணம் என குற்றம்சாட்டினார்.




