இஸ்ரேலில் உள்ள அணுசக்தி நிலையங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் மூன்றாவது வாரத்தையும் கடந்துள்ள நிலையில், போர் முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்படவில்லை. இதனால் பிராந்திய பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விவரங்களின்படி, ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையம் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, இஸ்ரேலில் உள்ள அணுசக்தி தொடர்புடைய இடங்களை நோக்கி ஈரான் ஏவுகணைகளை வீசியது. டைமோனா மற்றும் அராத் பகுதிகளில் உள்ள அணுசக்தி நிலையங்களை நோக்கி ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

டைமோனாவில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்தை நோக்கி வந்த ஏவுகணைகளில் ஒன்று அந்தப் பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் விழுந்ததாகவும், மற்றொன்று தரையில் விழுந்ததாகவும் தகவல். மேலும், இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு அவற்றை தடுக்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் அராத் பகுதியில் 84 பேரும், டைமோனா பகுதியில் 33 பேரும் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.