மேற்காசியாவில் போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், நடிகர் கமல் ஹாசன் சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, “ஈரானும் வாழட்டும்; ஊரானும் வாழட்டும்” என்று கூறினார்.

எண்ணெய்க் கிடங்குகள் வெடிக்கும் காட்சிகளை யூடியூப் போன்ற தளங்களில் பார்த்து, கிரிக்கெட்டில் சிக்ஸர் அடித்தது போல ஆர்ப்பரிப்பதை அவர் கடுமையாக விமர்சித்தார். இந்தியா ஆசியத் துணைக்கண்டத்தின் ஒரு பகுதி என்பதையும், போர் வலுப்பெற்றால் அதன் தாக்கம் நம்மையும் தொடும் என்பதையும் மறந்து விடக் கூடாது என அவர் வலியுறுத்தினார்.

போர் தீவிரமடைந்தால் பொதுமக்கள் பாதிக்கப்படலாம்; ஆனால் சிலர் பாதுகாப்பான இடங்களில் இருந்து கேள்விகள் எழுப்பி, பின்னர் மனித நேய முகமூடி அணிந்து தோன்றுவார்கள் என அவர் சாடினார். “ஊரான் வீடு பற்றி எரியும் போது தீயணைக்க உதவுவது தியாகம் அல்ல; மனித நேயம்” என்றும், அது அடிப்படைத் தற்காப்பும் என்றும் குறிப்பிட்டார்.

அரபு எண்ணெய் வளங்கள் நம் அடுப்பு, வாகனங்கள் போன்ற அன்றாட தேவைகளுக்கு துணை நிற்கின்றன என அவர் நினைவூட்டினார். ஆரஞ்சு அக்னி மேகங்களை ரசிப்பதை விட, அடுத்த மாத நெல் விதைப்புக்கான உரம் போன்ற அடிப்படை தேவைகள் குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், உலகிற்கு தேவையான உரம் மற்றும் பாஸ்பேட் போன்றவை சீனா மற்றும் சில வளைகுடா நாடுகளில் அதிகமாக உள்ளதாகவும், ஊடகங்களில் கிண்டல் செய்வது நாட்டிற்கோ போருக்கோ உதவாது என்றும் அவர் தெரிவித்தார். விஸ்வரூபம் படத்திற்காக அவர் எழுதிய வரியை மேற்கோள் காட்டி—“போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன்தான்; நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்”—அந்த தாய் இந்தியத் தாயாக இருக்கக் கூடாது என கூறி, “நான் ஆசியாவின் பக்கம். வாழ்க இந்தியா” என்று முடித்தார்.